சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 31,299 பேருக்கு தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்ட 31,299 பேருக்கு தடுப்பூசி

Update: 2021-05-27 22:33 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 31 ஆயிரத்து 299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த மாதம் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு முதல் தவணை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. 
31,299 பேர்
சேலம் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 18 வயது முதல் 44 வயதுடைய 31 ஆயிரத்து 299 பேருக்கு கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 2-வது தவணை மட்டும் போடப்படுகிறது. தற்சமயம் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு முதல் தவணையாக 27 ஆயிரத்து 730 கோவிஷீல்டும், 3 ஆயிரத்து 550 கோவேக்சினும் கையிருப்பில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-ம் தவணை வழங்க 1,990 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக் கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்