ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா: கிச்சிப்பாளையத்தில் தடுப்புகள் அமைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
தடுப்புகள் அமைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்குள் மற்றவர்கள் நுழையாமல் இருக்க தடுப்புகள் அமைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
4 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனாவுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு பகுதியில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்கவும், வெளி நபர்கள் உள்ளே செல்வதை தடுக்கவும் மாநகராட்சி மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் பகுதியில் உள்ள முதல் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வருவதை தடுக்கவும், மற்றவர்கள் அங்கு நுழைவதை தடுக்கவும் மாநகராட்சி மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
பொதுமக்கள் எதிர்ப்பு
மேலும் அந்த பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் சிலர் இந்த தடுப்புகள் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள், வெளியே சென்று பொருட்கள் வாங்க மட்டும் வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் அதிகாரிகள், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இதன் மூலம் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும், ஒரு வாரத்திற்குள் இந்த தடுப்புகளை எடுத்து விடுவோம் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.