தேவூர் பகுதியில் ெதாழிலாளர்கள் கிடைக்காததால் அறுவடை செய்ய முடியாமல் கேழ்வரகு பயிர்கள் சேதம்

அறுவடை செய்ய முடியாமல் கேழ்வரகு பயிர்கள் சேதம்

Update: 2021-05-27 22:32 GMT
தேவூர்:
தேவூர் பகுதியில் முழு ஊரடங்கால் தொழிலாளர்கள் கிடைக்காததால் அறுவடை செய்ய முடியாமல் கேழ்வரகு பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கேழ்வரகு சாகுபடி
தேவூர் அருகே சென்றாயனூர், பூமணியூர், கொட்டாயூர், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம், ஒடசக்கரை, நல்லங்கியூர், மேட்டுப்பாளையம், வட்ராம்பாளையம், தண்ணிதாசனூர், சுண்ணாம்புகரட்டூர், புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேழ்வரகு நாற்றங்கால் அமைத்து நாற்று பயிர்களை பிடுங்கி விவசாயிகள், தொழிலாளர்களை கொண்டு கேழ்வரகு பயிர்களை நடவு செய்தனர்.
இதையடுத்து தண்ணீர் பாய்ச்சுதல், களை வெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்து வந்தனர். தற்போது கேழ்வரகு நன்கு விளைந்து  அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
பயிர்கள் சேதம்
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கேழ்வரகு பயிர்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் கேழ்வரகை அறுவடை செய்யாமல் விவசாயிகள் அப்படியே வயல்களில் விட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்ததால் கேழ்வரகு பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கேழ்வரகு பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது, ஊரடங்கால் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் அறுவடை செய்ய முடியாததால், தற்போது பெய்த மழையால் பயிர்கள் சேதம் அடைந்து விட்டன. எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்