தம்மம்பட்டியில் ஆங்கில மருந்து பயன்படுத்தியதால் ஓமியோபதி மருத்துவமனைக்கு ‘சீல்’

ஓமியோபதி மருத்துவமனைக்கு ‘சீல்’

Update: 2021-05-27 22:32 GMT
தம்மம்பட்டி:
தம்மம்பட்டி கடைவீதியில் உள்ள தனியார் ஓமியோபதி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றுவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் வேலுமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓமியோபதி மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு குளுக்கோஸ் பாட்டில் மற்றும் ஊசி மருந்துகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஓமியோபதி மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் இந்த மருத்துவமனையில் தான் ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே இதற்கு சீல் வைக்கக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் ஓமியோபதி மருத்துவமனையில் ஆங்கில முறையில் ஊசி போடுவதற்கு அதிகாரம் இல்லை. அதனால் மருத்துவமனைக்கு சீல் வைக்கிறோம் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்