வீதிகளில் காய்கறி-பழங்கள் விற்பனை செய்ய 100 தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு அனுமதி; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

ஈரோட்டில் வீதிகளில் காய்கறி- பழங்கள் விற்பனை செய்ய 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-05-27 20:43 GMT
ஈரோடு
ஈரோட்டில் வீதிகளில் காய்கறி- பழங்கள் விற்பனை செய்ய 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடமாடும் கடைகள்
ஈரோடு மாநகராட்சியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. மருந்துக்கடைகள் மட்டுமே திறந்து உள்ளன. இதனால் காய்கறி- பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக நடமாடும் கடைகள் செயல்பட மாநகராட்சி அனுமதித்து உள்ளது.
மாவட்ட வேளாண் விற்பனைக்குழு மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இந்த நடமாடும் கடைகளை ஒருங்கிணைந்து வழிநடத்தி வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சியில் நேற்று முன்தினம் வரை 250 வாகனங்களில் காய்கறி- பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் விற்பனை நடந்து வந்தது.
தள்ளுவண்டி
இத்தனை வாகனங்கள் இருந்தாலும் சிறிய அளவிலான வீதிகளுக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்த பொருட்கள் சென்று சேரவில்லை என்ற புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து 100 தள்ளுவண்டி விற்பனையாளர்கள் வீதி வீதியாக சென்று காய்கறிகள்- பழங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று பல பகுதிகளில் தள்ளுவண்டி வியாபாரிகள் காய்கறிகள் விற்பனையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் தேவை அறிந்து அதிகாரிகள் நடமாடும் கடைகளை அதிகரித்தாலும் சில வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பகுதிகளுக்கு முழுமையாக செல்லாமல் ஒரே பகுதியில் சுற்றி வருவதை தவிர்த்து, அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்து பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க காய்கறி வியாபாரிகளும் முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்