மதுரையில் நேற்று புதிதாக 1395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் 1,395 பேருக்கு கொரோனா;

Update: 2021-05-27 20:31 GMT
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 1395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையாக வீசி வருகிறது. கடந்த ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு பாதிப்பும், உயிரிழப்பும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றும் தமிழகத்தில் புதிதாக 33 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களை போல மதுரையிலும் நாளுக்குநாள் பாதிப்பு ஏறுமுகமாகவே இருக்கிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 1395 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 950 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 61 ஆயிரத்து 478 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 689 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 44 ஆயிரத்து 831 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது.
10 பேர் சாவு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 474 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 7 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றவர்கள். அவர்கள் 53, 58, 44 வயது ஆண்கள், 65, 68,75,83 வயது முதியவர்கள், 65, 64, 66 வயது மூதாட்டிகள் என 10 பேர் அடுத்தடுத்து உயரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 846 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுபவர்களில் 40 சதவீதத்தினர் முதியவர்களாக இருக்கிறார்கள். அதுபோல் 30 சதவீதம் பேர் பெண்களாகவும், மீதமுள்ள 30 சதவீதம் பேர் 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். எந்த ஒரு வயது வரம்பும் இன்றி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்