அம்மாபேட்டை பகுதியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி; மேலும் 26 பேருக்கு தொற்று
அம்மாபேட்டை பகுதியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 26 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 26 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் 2- வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அம்மாபேட்டை வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலர் முகாம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தலைமை ஆசிரியர்
இந்த நிலையில் பூதப்பாடி எஸ்.பி.கவுண்டனூரை சேர்ந்த 52 வயது உடைய தொடக்கப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி காய்ச்சல் தொந்தரவு இருந்தது. இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அம்மாபேட்டையை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவரும், ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண், 60 வயது ஆண் ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
26 பேருக்கு தொற்று பாதிப்பு
இதற்கிடையே அம்மாபேட்டை, குருவரெட்டியூர், வெள்ளித்திருப்பூர், ஆலம்பாளையம், ஒலகடம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நேற்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்ததுடன், அந்த பகுதியை தடை செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.