கோபி பகுதியில், கடந்த 4 நாட்களில் ஊரடங்கை மீறியதாக 1,158 வாகனங்கள் பறிமுதல்; ரூ.6 லட்சம் அபராதம்
கோபி பகுதியில் கடந்த 4 நாட்களில் ஊரடங்கை மீறியதாக 1,158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு
கோபி பகுதியில் கடந்த 4 நாட்களில் ஊரடங்கை மீறியதாக 1,158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாகன சோதனை
தமிழகத்தில் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஊரடங்கை மீறி ரோட்டில் வாகனங்கள் சுற்றினால் அவைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அதன் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.6 லட்சம்
கோபி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், சிறுவலூர், நம்பியூர், வரப்பாளையம், கடத்தூர் போலீஸ் நிலைய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கடந்த 4 நாட்களில் நடந்த வாகன சோதனையின்போது முக கவசம் அணியாமல் வந்ததாக 1,189 பேரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 800-ம், சமூக இடைெவளியை கடைபிடிக்காத 57 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.28 ஆயிரத்து 500-ம் அபராதமாக போலீசார் வசூலித்தனர்.
இதேபோல் ஊரடங்கை மீறி ரோட்டில் சுற்றியதாக இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 1,158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் அந்தியூர் மற்றும் தவுட்டுபாளையம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி வந்ததாக 30 பேரின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் முக கவசம் அணியாமல் வந்ததாக 10 பேருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 300 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.