கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி ரூ.1 லட்சம் தப்பியது

கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்று ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் ரூ.1 லட்சம் தப்பியது.

Update: 2021-05-27 20:09 GMT
கடலூர், 

நாகம்மன் கோவில்

கடலூர் பஸ் நிலையத்தில் நாகம்மன் கோவில் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் இந்த கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் நாகம்மனுக்கு வழக்கமான பூஜைகள் பூசாரியால் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் கோவில் பூசாரி ரவி காலை, மாலையில் நாகம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். இரவு 8.30 மணி அளவில் கோவிலில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு ரவி மீண்டும் கோவிலுக்கு வந்தபோது கோவிலில் உள்ள இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி கோவில் செயல் அலுவலர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

கொள்ளை முயற்சி

அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியலில் உள்ள ஒரு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மற்ற 2 பூட்டை உடைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனால் உண்டியல் பணம் கொள்ளை போகவில்லை. மேலும் அருகில் இருந்த 2 உண்டியல்களிலும் கொள்ளை போகவில்லை என்பது தெரிந்தது.
இருப்பினும் இதுபற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் கோவில் செயல் அலுவலர் சங்கர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் கோவிலுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவையும், வெளியில் கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 1.50 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பூட்டை உடைக்க முயற்சி செய்து முடியாமல் சென்றது பதிவானது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் நேற்று முன்தினம் போலீசார் பாதுகாப்பில் இருந்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையே கோவில் செயல் அலுவலர் சங்கர் தலைமையில் கோவிலுள்ள 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.1 லட்சத்து 15ஆயிரத்து 939 இருந்தது தெரிந்தது. இந்த பணம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது. இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்