போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு: கமிஷனர் அலுவலக ஊழியர் பணி இடைநீக்கம்
திருச்சியில் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு புகார் தொடர்பாக கமிஷனர் அலுவலக ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சியில் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு புகார் தொடர்பாக கமிஷனர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முறைகேடு புகார்
தமிழக காவல் துறையில் மாநகர் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்களில் அமைச்சு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காவலர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது, ஓய்வு பணப்பலன்களை கணக்கிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்.
இதில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கேம்ப் கிளார்க்காக பெருமாள் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 2019-20-ம் ஆண்டு போலீஸ் நிலையங்களுக்கு ‘இன்வெஸ்டிகேஷன் சார்ஜ்’ நிதி ஒதுக்கியது தொடர்பான கணக்குகள் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் அந்த பணியில் விடுவிக்கப்பட்டார்.
பணி இடைநீக்கம்
இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கடந்த ஜனவரி மாதம் விருப்ப ஓய்வு பெற்ற சூப்பிரண்டு மணிராஜிடம் முறைப்படி புகாரை பெற்று நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு நடந்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெருமாளை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பெருமாள் ஏற்கனவே திருச்சி மாநகர கமிஷனராக இருந்த அமல்ராஜ், வரதராஜு, லோகநாதன் ஆகியோரிடம் கிளார்க்காக பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருச்சி மாநகர அமைச்சுப் பணியாளர் அலுவலகத்தில் முன்னாள் அதிகாரி ஒருவர் மீதும் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் முறைகேடு புகார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.