தற்காலிக தூய்மை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்-அமைச்சரிடம் கோரிக்கை

தற்காலிக தூய்மை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை விடுத்தனர்.;

Update: 2021-05-27 19:03 GMT
சிவகங்கை,
தற்காலிக தூய்மை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக  அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை விடுத்தனர்.

நிவாரண பொருட்கள்

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தலைமை தாங்கினார். இதில் மருத்துவமனையில் பணிபுரியும் 360 தூய்மை பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பருப்பு, மிளகாய்ப்பொடி ¼ கிலோ, மஞ்சள்பொடி 100 கிராம் ஆகியவை கொண்ட கொரோனா கால நிவாரண பொருட்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் .ரேவதி, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், உதவி அலுவலர்கள் முகமதுரபி, மிதுன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்கள பணியாளர்களாக..

விழா முடிந்ததும் வெளியே வந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் நிவாரண உதவி பெற்ற ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை அழைத்து செல்வது முதல் அவர்களுக்கு சேவை செய்வது, கொரோனா வார்டுகளை சுத்தம் செய்யும் பணி, நோயாளிகள் பயன்படுத்திய கழிவறைகளை சுத்தம் செய்வது, இறந்தவர்களை கிருமிநாசினி தெளித்து பேக்கிங் செய்வது என அனைத்து பணிகளையும் நாங்கள் தான் செய்து வருகிறோம். எனவே எங்களை முன்கள பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தான் பணிபுரிந்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரமாக்க வேண்டும். இதுவரை எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை.கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் பணிபுரிந்த போதும் தங்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

அப்போது சில பெண்கள் திடீரென்று அமைச்சரின் காலில் விழ முயன்றனர். அவர்களை அமைச்சர் தடுத்து நிறுத்தி, உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்