நெல்லை மாவட்டத்தில் உரக்கடைகள் மீண்டும் திறப்பு
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் கிடைக்க வசதியாக உரக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் கிடைக்க வசதியாக உரக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
விவசாய பணிகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி உரக்கடைகளும் மூடப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. தற்போது தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகள் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் உரக்கடைகளை கட்டுப்பாட்டுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை அனைத்து உரக்கடைகளும் திறக்கப்பட்டன. விவசாயிகள் உரக்கடைகளுக்கு சென்று தேவையான உரம், மருந்துகளை வாங்கிச்சென்றனர்.
காலை 10 மணி வரை...
இதுதொடர்பாக நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 1,957 ஹெக்டேர் பரப்பில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் கார் பருவ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைத்திட வசதியாக விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைத்திட வசதியாக அனைத்து உரக்கடைகளும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதன் மூலம் அரசு அனுமதி பெற்ற 277 தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளும் திறக்கப்பட்டு, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறைகளை பின்பற்றி விற்பனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.