கரூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மொத்த விற்பனை கொரோனா பரவல் காரணமாக 2 இடங்களுக்கு மாற்றம்

கரூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மொத்த விற்பனை கொரோனா பரவல் காரணமாக 2 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-05-27 18:22 GMT
கரூர்
மொத்த விற்பனை
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கரூரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் பலர் உழவர்சந்தைக்கும், மார்க்கெட் செல்வதாக கூறி சுற்றி திரிந்து வந்தனர். இதனால் கரூர் உழவர்சந்தை மற்றும் காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமமாக கரூர் பஸ் நிலையத்தில் கரூர் உழவர் சந்தை-காமராஜ் மார்க்கெட் மாற்றப்பட்டு காலை 3 மணி முதல் 6 மணி வரை மொத்த வியாபாரம் மட்டும் நடந்து வந்தது. மேலும், நகராட்சி வாகனங்கள் மூலம் 48 வார்களுக்கும் நேரடியாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 
வேறு இடங்களுக்கு மாற்றம்
இந்தநிலையில் பொதுமக்களின் நலன் கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் கரூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த மொத்த காய்கறி விற்பனைகள் சேலம் தேசிய புறவழிச்சாலையில் அமைந்துள்ள கொங்குகலைகல்லூரி விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்குக்கு மாற்றப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வியாபாரம் நடந்து வருகிறது.
இதில் கரூர் நகராட்சி 1 முதல் 28 வார்டு வரை தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள் கொங்குகலைக்கல்லூரி மைதானத்திலும், 29 வார்டு முதல் 48 வார்டு வரை உள்ள சில்லரை வியாபாரிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்