தேவையின்றி சுற்றித்திரிபவர்களை தடுக்க குளித்தலை நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகள் மூலம் அடைப்பு
தேவையின்றி சுற்றித்திரிபவர்களை தடுக்க குளித்தலை நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டது.
குளித்தலை
முழு ஊரடங்கு
கொரோனா முழு ஊரடங்கு காரணமாக, உரிய காரணங்கள் இல்லாமல் தேவையின்றி சுற்றித்திரிவர்களை தடுக்க குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் குளித்தலை போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க குளித்தலையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருப்பவர்கள் நகரப்பகுதிக்கும், நகரப்பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குளித்தலை பகுதியில் உள்ள பல்வேறு வழிகள் வழியாக சென்று வந்தனர்.
தடுப்புகள் அமைப்பு
இதைதடுக்கும் வகையிலும், போலீசாரின் சோதனைக்கு அனைவரும் உட்பட்டே செல்லும் வகையிலும் குளித்தலை - மணப்பாறை சாலையில் உள்ள ரெயில்வேகேட் பகுதி வழியாக குளித்தலை நகர பகுதிக்குள் வந்து செல்லும் அனைவரும், நேரடியாக குளித்தலை சுங்ககேட் பகுதி வழியாக வந்து செல்லும் வகையில், ரெயில்வேகேட் - ரெயில்நிலையம் செல்லும் சாலை, வைகநல்லூர் அக்ரகாரம் செல்லும் சாலை, சுங்ககேட் - எல்.எஸ்.சி. எதிரே உள்ள தெரு, சுங்ககேட் - முசிறி செல்லும் சாலையில் புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பாதை ஆகியவை போலீசார் மூலம் தடுப்புகள் அமைத்தும், கயிறுகள் கட்டியும் தடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இதனால் குளித்தலை நகரப்பகுதிக்குள் வந்துப செல்பவர்கள் அனைவரும் போலீசாரின் சோதனைக்கு உட்பட்டே சென்றுவரமுடியும். இதையும்மீறி தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவும் செய்து வருகின்றனர். இந்தநிலையில் குளித்தலை பகுதியில் தேவையின்றி சுற்றித்திரிந்த திருச்சி மாவட்டம் அழகரை மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (வயது 35), வலையப்பட்டியைச் சேர்ந்த ராஜாமுகமது (42), கீழதண்ணீர்பள்ளியைச் சேர்ந்த சரத்குமார் (28). திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (21) ஆகிய 4 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.