ரெயில் மூலம் 89 டன் ஆக்சிஜன் வந்தது

ரெயில் மூலம் 89 டன் ஆக்சிஜன் வந்தது

Update: 2021-05-27 18:10 GMT
கோவை

கோவைக்கு 3-வது தவணையாக ரெயில் மூலம் 89.28 டன் ஆக்சிஜன் வந்தது.

ஆக்சிஜன் வினியோகம்

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் பெறப் பட்டு வருகிறது. கடந்த 14 -ந் தேதி 898.61 டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகத்திற்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி கோவைக்கு முதல் தவணையாக 29.24 டன் திரவ ஆக்சிஜன் ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது. 2-ம் தவணையாக கடந்த 24-ந்தேதி 2 டேங்கர் லாரிகளில் 19.54 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது.

ரெயில் மூலம் வந்தது

3-வது தவணையாக நேற்று 6 டேங்கர் லாரிகளில் ரெயில் மூலம் 89.28 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. மதுக்கரை ரெயில்நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் இறக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது. 

அந்த வகையில் கோவைக்கு இதுவரை 3 தவணைகளாக 138.06 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது போல் தமிழ்நாட்டிற்கு இதுவரை  வழங்கப்பட்ட மொத்த ஆக்சிஜன் 1482.99 டன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்