விதைச்சான்று உரிமம் இல்லாத தென்னங்கன்றுகளை வாங்க வேண்டாம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் யோசனை

அறிமுகம் இல்லாதவர்கள் ஏமாற்ற வாய்ப்பு உள்ளதால் விதைச்சான்று உரிமம் இல்லாத தென்னங்கன்றுகளை வாங்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கு, அதிகாரிகள் யோசனை வழங்கி உள்ளனர்.

Update: 2021-05-27 18:00 GMT
பொள்ளாச்சி

அறிமுகம் இல்லாதவர்கள் ஏமாற்ற வாய்ப்பு உள்ளதால் விதைச்சான்று உரிமம் இல்லாத தென்னங்கன்றுகளை வாங்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கு, அதிகாரிகள் யோசனை வழங்கி உள்ளனர். 

இது தொடர்பாக கோவை மாவட்ட விதை ஆய்வுத்துறை துணை இயக்குனர் வெங்கடாசலம், பொள்ளாச்சி விதை ஆய்வு அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தென்னை சாகுபடி 

பொள்ளாச்சி மற்றும்  அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு 1 லட்சம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தென்னை பல்லாண்டு பயிர் ஆகும். இங்கு சான்றுபெற்ற ஏரளாமான விதைச்சான்று நிறுவனங்கள் உள்ளன. 

அங்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப பல்வேறு வகையான மரங்கள், அதாவது நெட்டை, குட்டை, சாவக்காடு ஆரஞ்சு, மலேசியன் மஞ்சள் குட்டை, பொள்ளாச்சி நெட்டை, அரசம்பட்டி நெட்டை, டிப்தூர் நெட்டை உள்பட பல ரகங்கள் இருப்பு உள்ளது. 

ஏமாற்றி விற்க வாய்ப்பு 

தற்போது கோடைமழை பெய்ததால் ஏராளமான விவசாயிகள் உழவு செய்து தங்கள் நிலத்தை தயாராக வைத்து உள்ளனர். மேலும் பல விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் தென்னை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  

இந்த நிலையில் அறிமுகமில்லாத, வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மற்றும் வெளிமாநில நபர்கள் விவசாயிகள் விரும்பும் ரகங்கள் எங்களிடம் இருக்கிறது, இதை சாகுபடி செய்தால் மகசூல் அதிகமாக கிடைக்கும் என்று கூறி, போலியான தென்னங்கன்றுகளை ஏமாற்றி விற்க வாய்ப்பு உள்ளது. 

விதைச்சான்று உரிமம்

எனவே பயிர் மற்றும் ரகம் குறிப்பிட்டு உள்ள விதைச்சான்று உரிமம் பெற்ற தென்னங்கன்றுகளை மட்டுமே விவசாயிகள் வாங்கி சாகுபடி செய்ய வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் நாற்றுகளை வாங்கி ஏமாற வேண்டாம்.  

தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேளாண்துறை உரிய ஏற்பாடுகளை செய்து உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்