மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அமைச்சர் பேட்டி
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு அமைச்சர் வாய்ப்பை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற எதிரியுடன் யுத்தம் செய்து கொண்டு இருப்பது தான் தற்போதைய சவாலாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையை ஏற்று, அதிகாரிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறோம்.
மழை பாதிப்பு
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்ட அணைகளுக்கு கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அதிக நீர்வரத்து இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணித்து தேவையான அளவு உபரி நீரை திறந்து விட்டதன் காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 150 எக்டேர் பரப்பிலான வாழை சேதமடைந்துள்ளது. இதேபோல் இதர பயிர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை வெள்ளத்தால் வள்ளியாறு, பெரியகுளம் பேரூர் குளம் போன்றவற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்புகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படும். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.
சேதம் கணக்கெடுப்பு
குத்தகை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை இருப்பதாக கூறுகிறீர்கள். இதுதொடர்பாக கடந்த காலங்களில் நாம் பேசியிருக்கிறோம். ஆனால் இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு, எந்த சூழ்நிலையிலும் யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. எனவே குத்தகை விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
மழை வெள்ள சேத கணக்கெடுப்பு பணி குறித்து இன்னும் 2 நாட்களில் முடிக்கப்பட்டு, கணக்கிடப்பட்ட ஆய்வு அறிக்கை அமைச்சரின் ஆய்வு கூட்டத்தின்போது முதல் கட்ட பட்டியல் கொடுக்கப்படும். உடனே செய்ய வேண்டிய நிவாரண பணிகள், நீண்ட காலப் பணிகள் என 2 விதமாக திட்டமிட்டு பணிகளை மேற்கொள்கிறோம். விவசாயிகளுக்கு போதுமான அளவு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விதை நெல் பிரச்சினை ஏற்படாது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் பலர் உடனிருந்தனர்.