கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்
கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சி மற்றும் எமனேசுவரம் சவுராஷ்டிரா சமூக நல சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப் பட்டது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். வடக்கு நகர் பொறுப்பாளர் ஜீவ ரெத்தினம், சமூக நலச்சங்க தலைவர் மாருதி ராமன், துணைத்தலைவர் மோகன்தாஸ், செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரமேஷ் பாபு அனைவரையும் வரவேற்றார். முருகேசன் எம்.எல்.ஏ. தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார். பின்பு பொதுமக்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் சத்து மாத்திரைகள் மற்றும் மூலிகை மருந்துகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். சத்து மாத்திரைகள், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசியை போட்டு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு நகர் செயலாளர் சேது கருணாநிதி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் தேவகிட்டு, கருப்பையா, முன்னாள் நகர் பொருளாளர் அக்பர்அலி, வர்த்தக அணி அமைப்பாளர் சிவகுமார், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முருகன், செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.