சோலையார் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உயர்வு

தொடர்மழை காரணமாக ஒரே நாளில் 7 அடி அதிகரித்து சோலை யார் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்து உள்ளது.;

Update: 2021-05-27 17:34 GMT
வால்பாறை

தொடர்மழை காரணமாக ஒரே நாளில் 7 அடி அதிகரித்து சோலை யார் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்து உள்ளது. 

சோலையார் அணை 

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த ஒருவாரமாக விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக இங்குள்ள நீரோடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. 

இதன் காரணமாக 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இந்த மாத முதல் வாரத்தில் 2 அடி நீர்மட்டமே இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 

நீர்மட்டம் 22 அடியாக உயர்வு
 

பகலில் மழை குறைவாக இருந்தாலும் இரவில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக  ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 7 அடி அதிகரித்து 22 அடியாக உயர்ந்தது. தற்போது அணைக்கு வினாடிக்கு 1,104 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

இதே நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பி.ஏ.பி. திட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சோலையார் அணையில் 23 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 37 மி.மீ., வால்பாறையில் 17 மி.மீ., நீராரில் 15 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

பருவமழை

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கோடைகாலத்தில் எப்போதுமே சோலையார் அணையின் நீர்மட்டம்  குறைவாகதான் இருக்கும். அதுபோன்று மழையும் இந்த அளவுக்கு இருக்காது. 

ஆனால் தற்போது மழை நன்றாக பெய்ததால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அத்த மாதம் பருவமழை தொடங்கி விடும் என்பதால், விரைவில் அணை நிரம்ப வாய்ப்பு இருக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்