முதுமலையில் 2-வது கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
முதுமலையில் 2-வது கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கூடலூர்,
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பிந்தைய காலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம். இதன்மூலம் வனவிலங்குகளின் எண்ணிக்கையை வனத்துறையினர் ஆண்டு தோறும் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது கோடை காலம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி முதற்கட்டமாக கடந்த 20-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுமலை, கார்குடி, தெப்பக்காடு, மசினகுடி, நெலாக்கோட்டை உள்ளிட்ட வனச்சரக பகுதியில் நடைபெற்றது.
இந்த நிலையில் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியில் உள்ள சிங்காரா, சீகூர், நீலகிரி கிழக்கு சரிவு சரகம் உள்ளிட்ட பகுதிகள் நேற்று 2-வது கட்டமாக வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
இப்பணியில் ஒரு குழுவில் 3 பேர் வீதம் 38 குழுவினர் ஈடுபட்டனர். வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள் மற்றும் நேரில் காணுதல் மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இப்பணி வருகிற 31-ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்துக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கிடப்படுகிறது. காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் காப்பக பகுதியில் சராசரியாக எத்தனை உள்ளது என துறை ரீதியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் 2 கட்டமாக வனவிலங்குகள் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.