சாலையோரம் இறந்து கிடந்த கரடி குட்டி
மசினகுடி அருகே சாலையோரம் கரடி குட்டி இறந்து கிடந்தது.
கூடலூர்,
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் வனச்சரகத்தில் வன ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சிறியூர் சாலையோரம் இறந்த நிலையில் கரடி குட்டி கிடந்தது. என்ன காரணத்தால் அது இறந்தது என தெரியவில்லை.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சாலையோரம் இறந்துகிடந்த பெண் கரடி குட்டி பிறந்து சுமார் 3 மாதம் இருக்கலாம். இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் முழு விவரம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.