பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய கிணத்துக்கடவு சந்தை திறப்பு

பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய கிணத்துக் கடவு சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-05-27 17:27 GMT
கிணத்துக்கடவு

பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம்  காய்கறி விற்பனை செய்ய கிணத்துக் கடவு சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

முழு ஊரடங்கு 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. 

எனவே பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 15 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் இங்குள்ள காய்கறி சந்தையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் இந்த சந்தைக்கு விவசாயிகள் மட்டுமே காய்கறிகளை கொண்டு வர அனுமதிக்கப்பட்டது. 

காய்கறி சந்தை 

அத்துடன் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்பவர்களை தவிர பொதுமக்கள் யாரும் சந்தைக்கு வரக்கூடாது என்றும் அறிவிக்கப் பட்டது.

 இதையடுத்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் சாகுபடி செய்த தக்காளி, வெங்காயம், அவரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், தேங்காய், பாகற்காய், பீட்ரூட், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். 

இந்த சந்தை தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் இந்த காய்கறி சந்தைக்கு வருவதை தடுக்க அங்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் மகிழ்ச்சி 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, நாங்கள் எங்கள் விளை நிலங்களில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான காய்கறிகளை என்ன செய்வது என்று திகைத்த வேளையில், விவசாயிகள் மட்டும் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். 

மேலும் செய்திகள்