மருத்துவ காப்பீடு அட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற ஏதுவாக முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற ஏதுவாக முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறவசதியாக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் உள்ள அனைவருக்கும் காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டு அட்டையில் உள்ளவர்களின் மருத்துவ செலவினை அரசே ஏற்கும்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ செலவினையும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு வழங்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவ காப்பீடு அட்டை பெறாதவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக் கான செலவினை செலுத்துவதில் பலர் பாதிக்கப் படுவதாக கோரிக்கை எழுந்தது.
உத்தரவு
இதனை தொடர்ந்து அரசு கொரோனா நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெறும் போது அவர்களிடம் அடையாள அட்டை இல்லா விட்டாலும் சிகிச்சை அளிக்கவும், குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது அடையாள அட்டை பெற விண்ணப்பத்தால் உடனடியாக அனுமதி வழங்கி அடையாள எண் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அடையாள அட்டை பெறாமல் இருந்தால் அந்தந்த பகுதி தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அதனை உறுதி செய்து குடும்பத்தினருக்கு அடையாள அட்டை பெற உதவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுமதி
இந்த பணியை அனைத்து தாலுகா அலுவலகங்கள் மூலம் அந்தந்த தாசில்தார்கள், தலையாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அவரவர் பகுதிகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை பெற விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும் விண்ணப்பங்களை தாமதிக்காமல் உடனடியாக அனுமதித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேராமல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் மருத்துவ உதவி கிடைக்க வழி ஏற்படும்.