தொடர் மழையால் நேரடி கொள்முதல் நிலையத்தில் சேதமடைந்த நெல் மூட்டைகளில் முளைப்பு தட்டியது - விவசாயிகள் வேதனை
தொடர் மழையால் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் சேதமடைந்த நெல் மூட்டைகளில் முளைப்பு தட்டியது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே காணைகுப்பத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 1,000 நெல் மூட்டைகள், மழைநீரில் நனைந்து சேதமடைந்தது. அந்த நெல் மூட்டைகளை பிரித்து அதிலிருக்கும் நனைந்த நெல்லை உலர வைக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் அங்கு திறந்தவெளியிலேயே வைக்கப்பட்டிருந்தன.
இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1,000 நெல் மூட்டைகள் வருகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் 400 முதல் 500 மூட்டைகள் வரையே கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினந்தோறும் நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் தேக்கம் அடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்த மழையால் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது.
அதுபோல் ஏற்கனவே பெய்த மழையால் வீணான நெல் மூட்டைகள் அகற்றப்படாததால் அந்த மூட்டைகளில் இருந்த நெல் ஊறிப்போய் அதில் தற்போது நாற்றுகளாக முளைப்பு தட்டியுள்ளது.
இதையறிந்ததும் நேற்று காலை அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் திரண்டு சென்று மழையால் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளையும் மற்றும் நாற்றுகளாக முளைப்பு தட்டியிருந்ததையும் வேதனையுடன் பார்த்தனர்.
இதேபோல் குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் இதேபோன்று நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், விவசாயிகளின் நலனுக்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.
இவ்வாறு திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்கு இல்லை. அதனால்தான் ஒவ்வொரு மழைக்காலங்களின்போதும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருவதால் எங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேமிப்பு கிடங்கு அமைத்துத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.