திண்டிவனம் அருகே, டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - ஆறாக ஓடிய ஆயிலை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்

திண்டிவனம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் ஏற்றி செல்லப்பட்ட ஆயில் சாலையில் ஆறாக ஓடியது. இதை மக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்.

Update: 2021-05-27 17:11 GMT
திண்டிவனம்,

தூத்துக்குடியில் இருந்து சென்னை செங்குன்றம் பகுதியில் எடப்பாளையத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைக்கு ஆலையில் உள்ள என்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும் 35 ஆயிரம் லிட்டர் ஆயிலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. லாரியை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த ஆணைக்குப்பம் பகுதியை சேர்ந்த கேசவன்(வயது 27) என்பவர் ஓட்டினார்.

நேற்று காலை 6 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த டேங்கர் லாரி ஒன்று கேசவன் ஓட்டிய டேங்கர் லாரியை முந்தி செல்ல முயன்றது. இதனால் கேசவன் டேங்கர் லாரியை வலது புறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, சாலையில் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். டேங்கர் லாரியில் இருந்த ஆயில் கீழே கொட்டி, ஆறாக ஓடியது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், குடம், கேன், வாளி உள்ளிட்ட பாத்திரங்களை எடுத்து வந்து ஆயிலை பிடித்து சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்