விவசாய பயன்பாட்டுக்கான இடுபொருட்கள் விற்பனை கடைகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கான இடுபொருட்கள் விற்பனை கடைகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளதை தொடர்ந்து அந்த கடைகள் நேற்று முதல் இயங்க தொடங்கின.
விழுப்புரம்,
டெல்டா பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடியும், மற்ற இடங்களில் சொர்ணவாரி சாகுபடியும் நடந்து வரும் நிலையில் ஊரடங்கினால் உரக்கடைகள், விதை விற்பனை நிலையங்கள், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பல இடங்களில் இடுபொருட்கள் கிடைக்காமல் விவசாய பணிகளை தொடர முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையறிந்த தமிழக அரசு, விவசாய பணிகளுக்கான உரம், விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கடைகள் இயங்கலாம் என்று அறிவித்ததோடு இந்த கடைகள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்குவதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
இடுபொருட்கள் கடைகள் திறப்பு
அதன்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகள், விதை விற்பனை நிலையங்கள், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் விவசாயிகள், விவசாய பணிகளை தொடர மிகவும் மகிழ்ச்சியோடு அந்த கடைகளுக்கு முக கவசம் அணிந்தபடி சென்று சமூக இடைவெளியை பின்பற்றி விவசாய பணிக்கு தேவையான இடுபொருட்களை வாங்கிச்சென்றனர்.