ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே டோக்கன்: கொரோனா தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்

ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே டோக்கன் வினியோகிப்பதால் கொரோனா தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி சென்றனர்.;

Update: 2021-05-27 16:29 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று பரவுவதுடன், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அதிகஅளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுபோக ஆங்காங்கே சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இங்கு தினமும் ஏராளமானோர் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு செல்கின்றனர். நேற்று ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் தடுப்பூசி போடுவதற்காக வந்திருந்தனர். நேரம் ஆக, ஆக கூட்டம் அதிகமானதால் முதலில் வந்த 150 பேருக்கு டோக்கன் கொடுத்துவிட்டு அவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். பின்னர் வந்தவர்களை உள்ளே அனுமதிக்காமல் அரங்கத்தின் கதவை இழுத்து பூட்டிவிட்டனர்.

இதனால் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதுவும் 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்களை 90 நாட்கள் ஆன பிறகு வந்து தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அறிவுறுத்தினர். மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

அதாவது 18 வயதிற்கு மேற்பட்ட முன் களப்பணியாளர்கள் மற்றும் மக்களிடம் நேரடியாக தொடர்புடைய காய்கறி, மளிகைக்கடை ஊழியர்கள், உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், சமையல் எரிவாயு வினியோகஸ்தவர்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கார் டிரைவர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே தடுப்பூசி போடுவதற்காக வந்து திரும்பி செல்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்துவதால் தடுப்பூசி போட்டு கொள்ள வருகிறோம். ஆனால் முதலில் வந்த சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போடுகின்றனர். மற்றவர்களை மறுநாள் வரும்படி கூறுகின்றனர். பொதுவாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்றனர். இங்கே வந்தால் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வருபவர்களை திருப்பி அனுப்பாமல் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். எந்தந்த இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சிறப்பு முகாம் எங்கெல்லாம் நடக்கிறது என்ற விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

பேரறிஞர் அண்ணா நுற்றாண்டு கலையரங்கில் இருந்த அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்துவிட்டோம். 150 டோக்கன் வரை கொடுத்துவிட்டு தான் கதவை பூட்டியுள்ளோம். இன்றைக்கு தடுப்பூசி போட வந்து திரும்பி சென்றவர்கள் நாளைக்கு வந்து போட்டு கொள்ளலாம். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் இங்கே தடுப்பூசி போடப்படுகிறது. 2-வது தவணை தடுப்பூசி போடக்கூடிய காலஅளவு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் 90 நாட்கள் ஆன பிறகு வந்து தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்றனர்.

மேலும் செய்திகள்