குடியாத்தத்தில் ரூ.13½ லட்சத்துடன் தனியார் நிறுவன ஊழியர் மாயம்
குடியாத்தத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ரூ.13½ லட்சத்துடன் மாயமாகிவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
குடியாத்தம்
தனியார் நிறுவன ஊழியர்
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வணிக நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் வசூலாகும் பணத்தை துப்பாக்கி ஏந்திய காவலாளியுடன் சென்று அந்த நிறுவனங்களில் பணத்தைப் பெற்று அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் குடியாத்தத்தை அடுத்த காளியம்மன் பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் நந்தகுமார் (வயது 35) என்பவர் குடியாத்தம் பகுதியில் உள்ள பெரிய மருந்தகங்கள், நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வசூலாகும் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.
ரூ.13½ லட்சத்துடன் மாயம்
கடந்த 24-ந் தேதி நந்தகுமார் பல்வேறு நிறுவனங்களில் இருந்து ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்தை வசூல் செய்துள்ளார். ஆனால் வசூலித்த பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து நந்தகுமாரை தொடர்பு கொண்டபோது பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி உள்ளார்.
அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நந்தகுமாரின் வீட்டுக்கு சென்று விசாரிதுள்ளனர். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை. இதனையடுத்து நந்தகுமார் ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்துடன் மாயமானது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், பிச்சாண்டி உள்ளிட்டோர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.