ஒரே படுக்கையில் 2 கொரோனா நோயாளிகள்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 கொரோனா நோயாளிகள் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தொற்று பாதிக்கப்பட்டோரின் வருகையும் அதிகரித்துள்ளது.

Update: 2021-05-27 16:10 GMT
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 கொரோனா நோயாளிகள் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தொற்று பாதிக்கப்பட்டோரின் வருகையும் அதிகரித்துள்ளது.
படுக்கைகள் தட்டுப்பாடு
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டு நிரம்பி வழிகிறது. கொரோனா நோயாளிகளுக்காக கடந்த ஆண்டு 191 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 134 கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் அமைக்கப்பட்டது. இதனால் மொத்தம் 325 கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. 
இந்த கொரோனா படுக்கைகளில் ஏற்கனவே 155 ஆக்சிஜன் படுக்கைகள் இருந்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் பலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்பதால், இதிலும் கூடுதலாக 45 ஆக்சிஜன் படுக்கைகளும் அமைக்கப்பட்டன. இருப்பினும் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. 
ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்,  தன்னார்வ அமைப்புகள் சார்பில் என 5000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் அடங்கும். இருப்பினும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தட்டுப்பாடு திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.
ஒரே படுக்கையில் 2 நோயாளிகள்
இதற்கிடையே அரசு மருத்துவமனைக்கு வருகிற கொரோனா நோயாளிகள் பலரும் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். கொரோனா வார்டு நிரம்பியதால் அவர்கள் கொரோனா படுக்கைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு காத்திருந்த ஒரு சிலர் உயிரிழக்கவும் செய்தனர். இந்த நிலையில் இதனை தவிர்க்கும் வகையில் ஆக்சிஜன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுபோல் ஆக்சிஜன் படுக்கைகளுக்காக ஆம்புலன்சில் பலரும் காத்திருந்து வந்தனர்.  இதனை தவிர்க்கும் வகையிலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டுள்ளன. 
இந்த வார்டில் பலரும் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கைகள் காலியாகும் வரை காத்திருந்து பின்னர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அந்த வகையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகள் படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல் அந்த வார்டில் அவர்களுக்கு ஆக்சிஜனுடனும், ஆக்சிஜன் தேவை இல்லாதவர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 
தனி படுக்கை கிடைக்க நடவடிக்கை
இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் கூறியதாவது
திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் ஒவ்வொருவருக்கும் தனி படுக்கை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனா பாதிப்பு அதிகரிப்பினால் நோயாளிகளின் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் காலியாகி விட்டன. இதனால் சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருப்பதை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கொரோன படுக்கைகள் காலியாக, காலியாக இங்கிருந்து நோயாளிகள் உள்ளே சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். மூச்சு திணறல் ஏற்படுகிறவர்களுக்கு சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜனும் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்