திருச்செந்தூர் கடற்கரையில் அரியவகை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின

திருச்செந்தூர் கடற்கரையில் அரியவகை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின

Update: 2021-05-27 16:05 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் அரிய வகை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. மீனவர் கையில் ஜெல்லி மீன் ஒட்டியதில் அவர் காயம் அடைந்தார். 
வலை வீசிய மீனவர்
தூத்துக்குடி மாவட்டத்தில் யாஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் அவ்வப்போது கரையில் வலையை வீசியும், தூண்டில் மூலமும் மீன்பிடிப்பது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று காலையில் திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கம் மகன் முத்துலிங்கம் (வயது 34), பைரவர் கோவில் கடல் பகுதியில் வீட்டு தேவைக்காக மீன் பிடிப்பதற்கு கரைவலை வீசினார்.
ஜெல்லி மீன்கள்
அப்போது கரையில் சொரி மீன் என்று அழைக்கக்கூடிய ஜெல்லி மீன்கள் ஏராளமாக ஒதுங்கி இருந்தன. அப்போது முத்துலிங்கம் வலையை இழுத்தபோது அவரது கையில் ஜெல்லி மீன் ஒன்று ஒட்டிக் கொண்டது. அந்த மீனை கையில் இருந்து அகற்றியபோது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மயக்க நிலைக்கு சென்ற அவரை அக்கம்பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மீனவர் முத்துலிங்கம் கூறியதாவது:-
அரிப்பை ஏற்படுத்தும்
புயல் காரணமாக யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வீட்டு தேவைக்காக கரைவலை மூலம் மீன்பிடித்து வருகிறோம். தற்போது கரைப்பகுதிக்கு ஏராளமான ஜெல்லி வகை சொரி மீன்கள் வருகின்றன. வலையை இழுக்கும்போது அந்த வகை மீன்கள் கையில் பற்றிக்கொள்ளும். இதில் சில மீன்கள் அரிப்பை ஏற்படுத்துவது உண்டு. ஆனால், எனது கையில் விஷ தன்மையுடைய அரிய வகை  ஜெல்லி மீன் சிக்கியதால் தீக்காயம் போல் ஏற்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவநிலையின்போது கரையோரங்களில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் வருவது வழக்கமானதுதான். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்