திருவாரூர் மாவட்டத்தில், ஊரடங்கை மீறியதாக 3 நாட்களில் 830 பேர் கைது; ரூ.83 ஆயிரம் அபராதம் வசூல் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 3 நாட்களில் மட்டும் 830 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும், ரூ.82 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறினார்.

Update: 2021-05-27 15:56 GMT
திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 3 நாட்களில் மட்டும் 830 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும், ரூ.82 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறினார்.

இரவு, பகலாக கண்காணிப்பு

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற 31-ந் தேதி வரை எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் இரவு, பகலாக போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட எல்லைகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறியதாவது:-

அபராதம் வசூல்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது எந்தவித காரணமும் இன்றி வீட்டை விட்டு வெளியில் சுற்றிய 830 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 830 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த 3 நாட்களில் முககவசம் அணியாமல் வெளியில் வந்த 332 பேர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 33 பேர் என 365 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.82 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, ஊரடங்கை பின்பற்ற வேண்டும். அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். இதனை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்