மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர்:-
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கலெக்டரிடம் மனு
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் சாந்தாவை நேற்று சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இந்த பணியை தடுத்து நிறுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சட்டவிரோதமாக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மேகதாது அணை கட்டுமான பணி தொடங்கி விட்டதாக கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் எனது தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மேகதாது பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, அங்கு அணை கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதையும், சாலை அமைக்கும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
அனைத்து கட்சி கூட்டம்
இந்த விவகாரம் குறித்து ஆதாரத்தோடு புகைப்படமும், செய்திகளும் வெளிவந்ததை தொடர்ந்து கடந்த 25-ந் தேதி தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஜூலை 5-ந் தேதிக்குள் அறிக்கை தரும் வகையில் ஒரு உயர்மட்ட ஆய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகம் அணை கட்டுமான பணி சட்டவிரோதமானது என்பதை பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் சுட்டி காட்டி உள்ளனர். மேகதாது அணை கட்டுமான பணியை கர்நாடகம் மேற்கொண்டால் தமிழகம் பாதிக்கப்படும். எனவே தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, விவசாயிகளை ஒருங்கிணைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டர் மூலமாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சங்க மாநில துணை செயலாளர் வரதராஜன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.