கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுக்க சிறப்பு மருத்துவ ஆய்வுக்குழு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பை தடுக்க சிறப்பு மருத்துவ ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-05-27 15:15 GMT
தேனி:

அமைச்சர் ஆய்வு

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். 

அதன்படி ஆண்டிப்பட்டி அருகே மணியகாரன்பட்டியில் நோய் கட்டுப்பாட்டு பகுதி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் நிலையம், சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டார். 

பின்னர் ஓடைப்பட்டி, வீரபாண்டி பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக...

இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளும் வசதி, சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

கொரோனா 2-வது அலை நகர்ப்புற பகுதிகளை விட கிராமப்புற பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால் தேனி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளை மையப்படுத்தி கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா நல மையங்கள் தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் பணி

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு விட்டது. தேனி மாவட்டத்துக்கு விரைவில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் நிலையம் 20 ஆயிரம் கிலோலிட்டர் கொள்ளளவு கொண்டதாக மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்துக்கு 81 லட்சம் டோஸ் தடுப்பூசி பெறப்பட்டது. அதில் 71 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது. 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

கூடுதல் தடுப்பூசி பெறுவதற்காக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு ஒருவார காலம் முகாமிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியையும், கொரோனா பரிசோதனை செய்யும் பணியையும் மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

கருப்பு பூஞ்சை

தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து பல்துறை மருத்துவ வல்லுனர்களை அழைத்து சென்னையில் நாளை (இன்று) ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். 

சிறந்த மருத்துவ குழுவினரை கொண்ட ஆய்வுக்குழு அமைத்து, இந்த நோய் பாதிப்பை முற்றிலும் தடுப்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி எப்போது செலுத்த வேண்டும் என்பதை கணித்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பணிநியமன ஆணை

பின்னர் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட டாக்டர்கள் 7 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
முன்னதாக மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், போடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்