பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு பயந்து கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

வேடசந்தூர் அருகே பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு பயந்து, மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-27 13:28 GMT

வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி கருங்குளத்தை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் காவியா (17) கரூர் மாவட்டம் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து 11-ம் வகுப்பில் சேர்ந்தார். 
கடந்த வருடம் கொரோனா பாதிப்பால் தேர்வு எழுதாமலே அனைவருக்கும் 11-ம் வகுப்பில் ஆல்பாஸ் போடப்பட்டது. இதையடுத்து காவியா 11-ம் வகுப்பு தேர்ச்சியடைந்து பிளஸ்-2 படித்து வந்தார். இந்த வருடம் பிளஸ்-2-க்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. 
இது காவியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினால் நான் பெயில் ஆகிவிடுவேன் என்று காவியா வீட்டில் வருத்தத்தோடு  கூறிக்கொண்டு இருந்தார்.
தற்கொலை
இதில் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ஊர் பொதுகிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே கூலிவேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சரோஜா மகளை காணாமல் ஊர் முழுவதும் தேடி அலைந்தார். அப்போது ஊர் பொதுகிணற்றில் காவியா பிணமாக மிதப்பது தெரியவந்தது. 
இது குறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி கயிறு கட்டி காவியாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி கிணற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-------------
படம்
----------
மாணவி காவியா

மேலும் செய்திகள்