உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் 8,146 மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் 8,146 மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்

Update: 2021-05-26 22:44 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்டுள்ள 8,146 கோரிக்கை மனுக்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
8,146 மனுக்கள்
தர்மபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் துறை மூலம் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக உரிய தீர்வு கண்டு விரைவான நடவடிக்கை எடுப்பது குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் துறையின் கீழ் இதுவரை 8,146 மனுக்கள் வந்துள்ளன. ஒவ்வொரு கோரிக்கை மனுவின் மீதும் அதிக அக்கறை செலுத்தி மனுவின் உண்மைத்தன்மையை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் தகுதியுள்ள நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிக முனைப்புடன் அரசுத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும்.
விரைவாக தீர்வு
வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவின் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தகவல்கள் எதுவும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மனுதாரரிடம் அந்த தகவல்களை பெற்று ஆய்வு நடத்த வேண்டும். தகுதியுள்ள நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து விரைவாக தீர்வு காண அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், முத்தையன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, அனைத்து தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
=======

மேலும் செய்திகள்