நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி காவேரிப்பட்டணம் அருகே சோகம்
நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி காவேரிப்பட்டணம் அருகே சோகம்
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூலித்தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாலேகுளி கோட்டான்குண்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு பிரவீன்குமார் (14), கிருபா (12) என்ற 2 மகன்கள் இருந்தனர். அண்ணன்-தம்பிகள் 2 பேரும் பாலேகுளியில் உள்ள அரசு பள்ளியில் முறையே 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள பெருமாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பெரியசாமி தனது 2 மகன்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (14) ஆகியோருக்கு நீச்சல் பழகி கொடுத்து கொண்டிருந்தார். அந்த கிணற்றில் 34 அடிக்கு தண்ணீர் இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நீச்சல் கற்று கொண்டிருந்த கிருபா திடீரென தண்ணீரில் மூழ்கினான்.
தண்ணீரில் மூழ்கினார்
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியசாமி மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். கிணற்றில் மற்றொரு பகுதியில் இருந்த பிரவீன்குமார் மற்றும் முருகேசன் இதைக் கண்டு கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் கிருபாவை காப்பாற்ற சென்ற பெரியசாமியும் தண்ணீரில் மூழ்கினார். சிறுவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய தந்தை மற்றும் மகனை தேடினர். மேலும் தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
சோகம்
பின்னர் நீண்ட நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய பெரியசாமி, கிருபா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது தந்தை, மகன் உடல்களை பார்த்து சங்கீதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரது கண்களை கலங்க செய்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=======