சேலம் மாவட்டத்துக்கு மேலும் 7,700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன

மேலும் 7,700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன

Update: 2021-05-26 22:28 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்துக்கு மேலும் 7,700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது. 830-க்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தற்போது தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்காக கூட்டம் அலைமோதுகிறது. 
தினமும் நீண்ட வரிசையில் நின்று ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
7,700 கோவிஷீல்டு தடுப்பூசி
இந்த நிலையில் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக சேலம் மாவட்டத்துக்கு 49 ஆயிரத்து 200 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்த தடுப்பூசியை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து வழங்குகிறது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு மூலம் இலவசமாக போடப்பட்டு வருகின்றன. இதனிடையே மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். 
இந்த நிலையில் சென்னையில் இருந்து மேலும் 7,700 கோவிஷீல்டு தடுப்பூசி சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 2,100 அனுப்பி வைக்கப்பட்டன.
தட்டுப்பாடு
இதனிடையே மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் 2-வது டோஸ் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசி வந்தவுடன் பொதுமக்கள் அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்