ஒரே இடத்தில் நின்று காய்கறி விற்பனை செய்யும் வண்டிகள்; பொதுமக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம்
ஒரே இடத்தில் நின்று காய்கறி விற்பனை செய்யும் வண்டிகளால் பொதுமக்கள் அதிக அளவில் கூடி கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
ஈரோடு
ஒரே இடத்தில் நின்று காய்கறி விற்பனை செய்யும் வண்டிகளால் பொதுமக்கள் அதிக அளவில் கூடி கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
காய்கறி விற்பனை
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வீடுகளில் இருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் நடமாடுவதை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி கடைகள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி அனுமதியும் வழங்கி உள்ளது. இந்த அனுமதி பெற்ற காய்கறி விற்பனை செய்யும் வாகனங்கள் முழுமையாக லாப நோக்கத்துடன் ஒரே இடத்தில் நிறுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நேற்று ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தை பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வண்டிகளில் இருந்து காய்களை சாலையில் இறக்கி வைத்து தற்காலிக கடைகளை போட்டு வியாபாரம் செய்தனர். இதனால் அந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் வந்து கூடினார்கள். இது கொரோனா தொற்று பரவும் அபாய நடவடிக்கையாகவே உள்ளது. இதுபோல் உழவர் சந்தை நடந்து வந்த அரசு மகளிர் பள்ளிக்கூடத்துக்கு வெளியேயும் வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்கிறார்கள்.
நடவடிக்கை தேவை
பொதுமக்கள் யாரும் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்பதற்காக வீதி வீதியாக சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை சில வியாபாரிகள் தவறாக பயன்படுத்துவதால் மற்ற பகுதிகளில் வண்டி வரும் என்று காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். அதுமட்டுமின்றி சில வீதிகளில் செல்லும் காய்கறி வாகனங்கள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சுற்றி விட்டு நேரடியாக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கடை விரிக்கிறார்கள்.
எனவே காய்கறி வியாபாரிகள் சுழற்சி முறையில் வீதிகளில் நேரடியாக சென்று விற்பனை செய்யவும், வாகனங்களில் காய்கறி விற்பனை நடைபெறுவது தொடர்பாக ஒலிப்பெருக்கியில் அறிவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். வீதி வீதியாக பொருட்கள் கொடுப்பதாக அறிவித்து விட்டு பொருட்கள் கொண்டு செல்லவில்லை என்றால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க முடியாது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.