வாசுதேவநல்லூர் அருகே காதல் தம்பதி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்
வாசுதேவநல்லூர் அருகே காதல் தம்பதி எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே காதல் தம்பதி எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.
நூற்பாலை தொழிலாளர்கள்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் என்ற அருளாச்சி கிராமம் கன்னிமாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரய்யா. இவருடைய மகன் மகேந்திரன் (வயது 35). இவருடைய மனைவி தாரணி (32). இவர்கள் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தங்களது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
போலீசார் விசாரணை
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த மகேந்திரன், தாரணி ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதன் விவரம் வருமாறு:-
காதல் தம்பதி
மகேந்திரனும், தாரணியும் கடந்த சில ஆண்டுகளாக நூற்பாலையில் ஒன்றாக வேலை செய்தபோது, காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் மகேந்திரனுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த மகேந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதுகுறித்து மனைவியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கணவருடன் சேர்ந்து தாரணியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. காதல் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.