ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.;

Update: 2021-05-26 19:29 GMT

ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

வசந்த உற்சவம்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 18-ந்தேதி தொடங்கி நேற்று வரை 9 நாட்கள் நடைபெற்றது.

இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 5.45 மணிக்கு சென்றடைந்தார். வசந்த உற்சவத்தின் போது கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில்  அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஒய்யாரமாக வீற்றிருந்தார்.

சூர்ணாபிஷேகம்

வசந்த உற்சவத்தின் 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 

நிறைவு நாளான நேற்று மாலை 4மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு ஆழ்வான் திருச்சுற்று வலம்வந்து மாலை 5.30 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு மாலை 6.45 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். வசந்த மண்டபத்திலிருந்து நம்பெருமாள் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

மேலும் செய்திகள்