திருச்சியில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது
திருச்சியில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய 2 பெண்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சியில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய 2 பெண்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை
மாநகர போலீஸ் கமிஷனர் அருண் திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தல், கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாராய ஊறல் அழிப்பு
இந்த நிலையில் திருச்சி மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த விமலாதேவி (வயது 50) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜீவிதா (35) ஆகியோர் தங்களது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விமலாதேவி, ஜீவிதா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 லிட்டர் சாராயம், 165 லிட்டர் சாராய ஊறல், சாராயம் காய்ச்சுவதற்கான பாத்திரங்கள், அடுப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.