ரெயிலில் கடத்தப்பட்ட கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்

ரெயிலில் கடத்தப்பட்ட கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-26 18:23 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 189 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கண்காணிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ரெயில்களில் மது பாக்கெட்டுகளை கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கு தகவல்  கிடைத்தது. 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், முரளிமனோகரன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில், பெங்களூருவில் இருந்து வந்த ரெயில்களில் இருந்து இறங்கும் பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இருந்து இறங்கி வந்த ஒருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். 

விசாரணையில் அவர் வாணியம்பாடி அடுத்த சென்னப்பட்டு பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 33) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 43 மது பாக்கெட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

அதேபோன்று 3- வது பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்த வாலாஜா ரோடு அடுத்த அம்மூர் சைதாப்பேட்டை தெருவை சேர்ந்த தமிழ் மணி மகன் நாகராஜ் (30) என்பவரிடமிருந்து 750 மில்லி கொள்ளளவு கொண்ட 4 மது பாட்டில்கள், 180 மில்லி கொள்ளளவு கொண்ட 112 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் வாணியம்பாடியை அடுத்த சென்னம்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் சோமசுந்தரம் (33) என்பவரிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 30 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். 

அவர்களிடமிருந்து மொத்தம் 189 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்