காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்களை வழங்க அனுமதி; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;
நாமக்கல்:
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டோர் டெலிவரி
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் பொதுமக்களுக்கு தடையின்றி மளிகை பொருட்கள் கிடைக்க நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாடு செய்து வந்தது. இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
டோர் டெலிவரி செய்ய விருப்பம் உள்ள மளிகை கடை உரிமையாளர்கள், அதற்கான முறையான அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதி அட்டை ஆகியவற்றை நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளலாம். இது போலவே மளிகை பொருள் மொத்த விற்பனையாளர்கள் ஆர்டர் பெற்ற பொருட்களை நகராட்சியின் அனுமதி பெற்ற சில்லரை வணிகர்களின் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும்.
அனுமதி ரத்து
இதற்கான அனுமதியை பெற விண்ணப்ப கடிதம், கடைக்கான அரசு அனுமதி சான்று, டோர் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனத்தின் விவரம், ஓட்டுனர் விவரம், கடை ஊழியரின் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். டோர் டெலிவரி செய்வோர் இரட்டை முக கவசம் அணிந்தும், கையுறைகள் அணிந்தும், பொதுமக்களுடன் போதிய சமூக இடைவெளி கடைபிடித்தும் பொருட்களை பாதுகாப்புடன் டெலிவரி செய்ய வேண்டும்.
நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் வணிகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள், வணிகர் சங்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள். அவர்களுக்கான விற்பனை அனுமதியை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர் சங்கமே பரிந்துரை செய்யும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.