டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு கொடி ஏந்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல் மாவட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-26 18:20 GMT
எலச்சிபாளையம்:
வேளாண் சட்டங்கள்
மத்திய அரசின்  வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் விவசாயிகள், கம்யூனிஸ்டு கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எலச்சிபாளையத்தில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மல்லசமுத்திரம், குமரமங்கலம், செம்பாம்பாளையம், மோளிபள்ளி, ஒடக்காடு, ராயர்பாளையம், சந்தைபேட்டை, சத்யாநகர், சமத்துவபுரம், சின்னஎலச்சிபாளையம் பிரிவு ரோடு, பெரியமணலி, வேப்பம்பட்டி, வையப்பமலை உள்பட பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியினர் சுந்தரன், சுரேஷ், குப்புசாமி, ரமேஷ், தேவராஜ், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாய தொழிலாளர் சங்கம்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் எலச்சிபாளையத்தில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகி ஜெயராமன் தலைமை தாங்கினார். இதேபோல் முகாசியில் குப்புசாமி தலைமையிலும், சின்ன எலச்சிபாளையத்தில் மணிகண்டன் தலைமையிலும் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம் பகுதியில் விவசாய சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெப்படை பெருமாள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் நல்லாக்கவுண்டர் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்