முழு ஊரடங்கால் மக்கள் பாதிக்காமல் இருக்க 448 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை; அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க 448 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2021-05-26 18:20 GMT
நாமக்கல்:
ஆய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு எம்.பி.க்கள் சின்ராஜ், கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், ஈ.ஆர்.ஈஸ்வரன், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கு அமல்படுத்தும் பணிகள், பொது மக்களுக்கு அத்தியாவாசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வழங்கும் பணிகள், பால் மற்றும் குடிநீர் வினியோக பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆக்சிஜன் வினியோகம்
அப்போது அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவம் படித்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை நியமித்ததன் அடிப்படையில், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரெயில் மூலம் ஆக்சிஜன் அடங்கிய டேங்கர்கள் கொண்டு வரப்பட்டு, நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
படுக்கை வசதி
தனியார் மருத்துவமனையினர் கொரோனா நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கை வசதி வழங்கி, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மேற்கொள்ளும் கொரோனாவிற்கு எதிரான மக்களை காக்கும் இந்த போராட்டத்தில், பொதுமக்கள் பங்கெடுத்து முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களிடமிருந்து நோய்த்தொற்று பரவாமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
448 நடமாடும் வாகனங்கள்
பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 82 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து தினசரி 2 ஆயிரம் முதல் 2,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 116 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் 2 நாட்களில் 448 நடமாடும் வாகனங்கள் மூலம் 160 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திட்ட இயக்குனர் மலர்விழி, நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ரா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்