தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: திருவாரூர் மாவட்டத்தில், 59 இடங்களில் சோதனைச்சாவடி

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 59 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2021-05-26 18:14 GMT
திருவாரூர்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று 2-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 59 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாகன சோதனை

சோதனை சாவடிகளில் தொடர் வாகன சோதனை நடந்து வருகிறது. 40 மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி நடக்கிறது. கண்காணிப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் என ஆயிரம் பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீசாரின் தீவிர கண்காணிப்பு பணி காரணமாக தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் சுற்றுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களை விட நேற்று குறைவாக காணப்பட்டது. வங்கிகள் செயல்பட்ட போதிலும் அங்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இதேபோல் ஓட்டல்கள் திறந்திருந்தாலும், உணவு பொருட்களை வாங்க குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்கள் வந்தனர். ஊரடங்கு காரணமாக திருவாரூர் நகரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுகன், தேவதாஸ் உள்ளிட்டோர் கண்காணிப்புகளை மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம், அண்ணாசிலை, வேதாரண்யம், நாகை சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று ஊரடங்கை மீறியதாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்