வேலூர் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு சிகிச்சை; ஒருவர் பலி
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
வேலூர்
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கருப்பு பூஞ்சை நோய்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் நபர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் தாக்குகிறது.
அதேபோன்று சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறும் நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயால் பாதித்த நபர்கள் உடனடியாக உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 23-ந் தேதி வரை கருப்பு பூஞ்சை நோயால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் 8 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
40 பேருக்கு சிகிச்சை
இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேரும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 13 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், இந்த மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வரை அதிகபட்சமாக 10 நபர்கள் சிகிச்சை பெற்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நோய்க்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது 40 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருப்பு பூஞ்சை நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
ஒருவர் பலி
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருந்தது.
இதையடுத்து அவரின் இடது கண் பாதிக்கப்பட்டதால் அதனை டாக்டர்கள் அகற்றினர். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென உயிரிழந்து விட்டார். இவர் கொரோனாவுக்கு இறந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் வேலூரில் பலியான சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.