மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மயிலாடுதுறை மாவட் டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-05-26 17:48 GMT
மயிலாடுதுறை:
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மயிலாடுதுறை மாவட் டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், பல மாதங்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வலியுறுத்தியும் சமூக இடைவெளியுடன் விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மேகநாதன், இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல மயிலாடுதுறை நகரம் கிட்டப்பா நகரிலும், சோழம்பேட்டை கிராமத்திலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர்
திருக்கடையூரில் விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 7-ம் ஆண்டு ஆட்சியை கருப்பு தினமாக அனுசரித்து திருக்கடையூர் மெயின் ரோட்டில் கருப்புக்கொடியை கையில் ஏந்தி, கோஷமிட்டனர். திருக்கடையூரை சுற்றியுள்ள பகுதிகளான அபிஷேகக்கட்டளை, டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், ஆக்கூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சீர்காழி
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் மத்திய அரசை கண்டித்தும் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வீட்டின் முன்பு கையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் மசோதாவை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் வீட்டின் முன்பு கையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாய கூட்டமைப்பு, இந்திய கம்யூனிஸ்டு் கட்சியை சேர்ந்த விவசாய சங்கத்தினர்  வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவராமன், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், விவசாய கூட்டமைப்பு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். இதைப்போல ஆச்சாள்புரம், மகேந்திரப்பள்ளி, பழைய பாளையம், வடரங்கம், அகரஎலத்தூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்