3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வட்ட செயலாளர் ராவண ராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டத்தலைவர் அறிவழகி, நகர செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குப்புசாமி, பாலமுருகன், கோவிந்தராசு, பச்சமுத்து, ராஜசேகர், நடராஜன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்
இதேபோல் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் பைபாஸ் சாலையில் வி. எம். சேகர் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் மணிவாசகம், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, நகர்க்குழு உறுப்பினர் சையதுஇப்ராகிம், மாதர்சங்க நிர்வாகிகள் சித்ரா குமாரி, பவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பபட்டது.
பெண்ணாடம்
பெண்ணாடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திட்டக்குடி வட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க செயலாளர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. சங்க தலைவர் கணேசன், செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். இதேபோல் இறையூர், முருகன்குடி கிராமத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தாழநல்லூர் கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க செயலாளர் முத்துலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திட்டக்குடி
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திட்டக்குடியில், மனிதநேய மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணை செயலாளர் திட்டக்குடி சாகுல் அமீது தலைமை தாங்கினார்.
இதில் ஒன்றிய தலைவர் ஆட்டோ அமானுல்லா, நகர செயலாளர் அம்சா முகமது, கிளை தலைவர் அன்சாரி முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா முழுஊரடங்கு காரணமாக சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்
மாவட்டத்தில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு ஆகியன சார்பில் தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில் அருகே பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதேபோன்று கண்டமங்கலம் கிராமத்தில் காவிரி டெல்டா பாசன பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் கே.வீ. இளங்கீரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதி பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
அப்போது அவர்கள் பிரதமர் மேடியின் உருவ பேனரை வைத்து, அதன் அருகே நின்று 2 சில்வர் தட்டுகளில் ஒலியை எழுப்பி, விரைவில் விழித்து எழுந்து கோரிக்கைகளை கேளுங்கள் என்று கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தையும் தெரிவித்தனர்.