தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

கோத்தகிரியில் தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-26 17:08 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள சக்திமலை கோவிலுக்கு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனையறிந்த குடியிருப்பு வாசிகள் தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றக்கூடாது என்று மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியதாக தெரிகிறது.

ஆனாலும் தொடர்ந்து தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற மருத்துவமனை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்ததோடு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் எனக்கூறி அந்த தனியார் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ரமேஷ், வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது, தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த பகுதி குடியிருப்புக்கள் அதிகமாக உள்ளதால், சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்களின் எதிர்ப்பு உள்ளது. இது குறித்து வருவாய்த்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்